ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்து, நாயகனாக நடித்துள்ள ‘எமன்’ திரைப்படம் நாளை பிப்ரவரி 24ம் தேதி வெளியாக உள்ளது.

நாளை வெளிவரும் மூன்று படங்களில் ‘எமன்’ படத்திற்குத்தான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஜீவா சங்கர் இயக்குனராக அறிமுகமான ‘நான்’ படத்தில்தான் விஜய் ஆண்டனி நாயகனாக அறிமுகமானார்.

இசையமைப்பாளராக இருந்து நாயகனாக வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் ஆண்டனியே ‘நான்’ படத்தைத் தயாரித்து வெளியிட்டார். அந்தப் படம் வித்தியாசமான கதை, திரைக்கதை ஆகியவற்றால் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

அடுத்து விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த ‘சலீம்’ படமும் வரவேற்பிலும், வசூல் ரீதியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த ‘இந்தியா பாகிஸ்தான்’ வெற்றியைப் பெறவில்லை.

இருந்தாலும் அந்தத் தோல்வியை அதற்கடுத்து வெளிவந்த ‘பிச்சைக்காரன்’ படத்தின் மாபெரும் வெற்றி மூலம் சரி செய்து விட்டார். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. விஜய் ஆண்டனிக்கு என ஒரு தனி அடையாளத்தை இந்தப் படம் இன்னும் அதிகப்படுத்தியது.

கடந்த வருடக் கடைசியில் வெளிவந்த ‘சைத்தான்’ படமும் வித்தியாசமான படமாக அமைந்து மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் லாபகரமான படமாக அமைந்தது.

நாளை வெளிவர உள்ள ‘எமன்’ படம் எந்த மாதிரியான வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு வருவது இயல்புதான்.

ஒரு முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ள ‘எமன்’ படம் இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. படத்தின் டிரைலர் இது விஜய் ஆண்டனியின் மற்றுமொரு வித்தியாசமான படம் என்ற உணர்வை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் அரசியல் கதை சார்ந்த படங்கள் அபூர்வமாகத்தான் வருகின்றன. ரசிகர்கள் எதிர்பார்க்கும் சூடான அரசியல் வசனங்கள், எதிர்பாராத திருப்பங்கள், புதுமையான காட்சிகள் இருக்கின்றன என்று சொல்லப்படும் ‘எமன்’ படம் அப்படியே இருக்கும் பட்சத்தில் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும் என்று திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

நன்றி

www.screen4screen.com

Leave a Reply