அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ ஆகஸ்ட் 24 அன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் இப்படம் பற்றி கூறியிருப்பதாவது,

விவேக் ஓபராய்

vivek oberoi in vivegam

ஹிந்தியில் பல வெற்றிப் படங்களில் நாயகனாக நடித்துள்ள விவேக் ஓபராய், தமிழில் அறிமுகமாகும் படம் ‘விவேகம்’.

“இயக்குனர் சிவா என்னை சந்தித்து கதை சொன்னபோது 15 நிமிடங்கள் கேட்டேன். போதும், நான் நடிக்கிறேன் என சொல்லி விட்டேன். மொத்த கதையையும் கேட்காமல் நான் எடுத்த முடிவு சரி தான் என்பதை விவேகம் நிரூபித்து விட்டது. தமிழ் மொழியில் பேசி நடிப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது.

விவேகம் கதையை கேட்ட பிறகு, அஜித் சிவா கூட்டணியில் வெளி வந்த வீரம், வேதாளம் படங்களைப் பார்த்தேன். ஒரு ஹீரோவுக்கும், இயக்குனருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி புரிந்தது.

படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் ஆர்யன், அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறேன். எல்லோரும் இது ஹாலிவுட் படம் போல இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியில்லை, விவேகம் சர்வதேசத் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ் படம். என் வசனங்களை தங்கிலீஷில் எழுதி, மனப்பாடம் செய்து பேசி தான் நடித்தேன். இந்த படத்தில் நான் டப் செய்யவில்லை, பிரின்ஸ் படத்தில் எனக்காகக் குரல் கொடுத்தவரின் குரல் பொருத்தமாக அமைந்ததால் எனக்கு அவர் தான் டப்பிங் பேசினார்.

அஜித் அண்ணாவை முதல் முறை பல்கேரியாவில் சந்தித்தேன். இந்தப் படத்தில் நான் நடிக்க ஓகே சொன்னதற்கு நன்றி என்றார் அஜித். இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு தான் பெருமை என்றேன். நான் ஷாலினியின் தீவிர ரசிகன் என்பதையும் சொன்னேன். படப்பிடிப்பில் எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவார். அஸிஸ்டெண்ட் உட்பட அனைவருக்கும் எந்த ஈகோவும் இல்லாமல் டீ ஊற்றி கொடுப்பார்.

அஜித் அண்ணாவுடன் நடிப்பதைக் கேள்விப்பட்ட என் உறவினர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் மற்றும் என் ரசிகர்களால் எனக்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

காஜல் அகர்வால் நடித்த முதல் படமே என்னோடு தான். பல வருடங்கள் கழித்து மீண்டும் விவேகம் படத்தில் அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. துள்ளலான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் இதில் மிகவும் சென்சிட்டிவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அக்‌ஷராவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. கமல் சார், சரிகா, ஸ்ருதிஹாசன் எல்லோரும் அக்‌ஷராவை நினைத்து நிச்சயம் பெருமைப்படுவார்கள்.

மைனஸ் 17 டிகிரி குளிரில் பல்கேரியாவில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 4 கோட் போட்டுக் கொண்டு நடித்த எனக்கே குளிர் தாங்கவில்லை. வசனங்கள் பேச மிகவும் கஷ்டப்பட்டேன். அதிலும் அஜித் அண்ணா வெற்று உடம்போடு நடித்தார். காலை 5 மணிக்கு ஹோட்டலில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். நான் எழுந்து போய் பார்த்தால் ஜிம்மில் அஜித் மட்டும் வொர்க் அவுட் செய்து கொண்டிருப்பார். எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்தால் இப்படி கடுமையான உழைப்பை கொடுக்க முடியும்.

‘விவேகம்’ படம் மிக மிக வித்தியாசமான தமிழ்ப் படமாக இருக்கும்.

அக்ஷராஹாசன்

aksharahaasan in vivegam

 

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளும், நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையுமான அக்ஷராஹாசன் ‘விவேகம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.

”இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த போது, அது உடனே என்னைக் கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்படியாகவும் இருந்தது.

பல பரிமாணங்கள் கொண்ட இந்தக் கதாபாத்திரத்தை செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அஜித் சாருடன் பணி புரிந்தது ஒரு அருமையான அனுபவம். தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் எல்லோருக்கும் உதவியாக இருப்பார்.

எங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால் அதனைப் பற்றி ஷூட்டிங் இடைவேளைகளில் நிறைய பேசினோம். பல்கேரியா மற்றும் செர்பியாவின் கடும் குளிரிலும் உறையும் பணியிலும் இப்படக் குழுவினர் மிகக் கடுமையாக உழைத்தனர். அந்த அசுர உழைப்பின் பலனை மக்கள் விரைவில் திரையில் காணப்போகின்றனர்.

‘விவேகம்’ படத்தின் ரிலீஸை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அமிலா டெர்ஜிமெஹிக்

Vivegam Amila Terzimehic

படத்தில் அஜித் குமாரின் ‘கவுண்டர் டெரரிஸ்ட் ஸ்க்வாட்’ அணியின் ஒரு அங்கமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக் [ Amila Terzimehic ] .

‘விவேகம்’ போன்ற ஒரு உண்மையான உலகத் தரம் வாய்ந்த சர்வதேச படத்தின் மூலம் இந்திய சினிமாவில் நான் கால் பதிப்பது எனக்கு பெரிய பெருமை. இந்த வாய்ப்பினை எனக்களித்த இயக்குனர் சிவாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் பியர்ஸ் பிராஸ்னன் கதாநாயகனாக நடித்த ‘தி நவம்பர் மேன்’ படத்தில் நான் செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்த இயக்குனர் சிவா ‘விவேகம்’ பட வாய்ப்பினை எனக்களித்தார் என அறிந்தேன்.

விவேகத்தில் எனது நடிப்பு மட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகளில் கடின சண்டை போடும் திறனும் தேவைப்பட்டது. ஆக்ஷன் படங்களின் ரசிகையான எனக்கு இயக்குனர் சிவா கூறிய ‘விவேகம்’ படத்தின் கதையும், அதில் எனது கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.
அஜித் குமாரை முதல் முறையாக சந்திப்பதற்கு முன்னரே அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பதைத் தெரிந்து கொண்டேன். ஆனால் அவரைச் சந்தித்த போது துளி கூட தலைக்கனம் இல்லாமல் அவ்வளவு எளிமையான மனிதராக எல்லோருடனும் பழகினார். அவருடைய தொழில் பக்தி நான் இதுவரை வேறெந்த நடிகரிடமும் பார்த்ததில்லை.

எல்லா ஆபத்தான சண்டைக் காட்சியையும் டூப் வேண்டாம் என்று அவரே செய்து அசத்தினார். இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இன்னமும் அவரது கண்களில் ஒரு சிறுவனின் துள்ளலும் பாசிட்டிவிட்டியும் உள்ளது . எனது சினிமா வாழ்க்கையும் இந்த உலகத்தையும் அவரது கண்ணோட்டத்திலேயே கண்டு வாழ விரும்புகிறேன். மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அவருக்கு நிகர் அவரே.

‘விவேகம்’ படத்தின் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த தொழில் பக்தியுடன் பெரிய அளவில் உண்மையாக உழைத்தது. இந்திய சினிமா ரசிகர்கள் ‘விவேகம்’ படத்தை நிச்சயம் மாபெரும் வகையில் ரசித்துக் கொண்டாடுவார்கள் என உறுதியாக சொல்லுவேன்.

சர்ஜ் க்ரோசோன் கஜின்

vivegam Serge Crozon Cazin

‘Casino Royale, 300 : Rise Of An Empire, The Transporter Refunded’ போன்ற மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின் [ Serge Crozon Cazin ].

‘விவேகம்’ படத்தில் கதாநாயகன் அஜித்தின் அணியான ஐவரில் ஓருவராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் இவர்.

”இந்த கதாபாத்திரத்திற்கான இண்டர்வீயூவில் கலந்து கொண்ட பிறகே இயக்குனர் சிவா எனக்கு இந்த வாய்ப்பளித்தார். சிவாவின் காட்சிப்படுத்தல் முறையையும், படத்திற்கு என்ன வேண்டும் என்ற அவரின் தெளிவும் என்னை ஈர்த்தது.

அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாகும். ‘விவேகம்’ படத்தில் எனது காட்சிகளை முடித்த பின் வீடு திரும்பிய போதுதான் அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றும், அவர் எவ்வளவு பெரிய பிரபலம் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

படப்பிடிப்பில் அவ்வளவு எளிமையாக இருந்தார். அவர் செய்த ஆக்ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. டூப் வேண்டாம் என்று கூறி எல்லா சண்டைக் காட்சி சாகசங்களையும் தானே திறம்பட செய்து அசத்தினார். அவ்வளவு கடின உழைப்பாளி அவர். படப்பிடிப்பு இடைவெளிகளில் அவருடன் நடந்த உரையாடல்கள் எனது மனதில் இனிய நினைவாக என்றுமே இருக்கும் . அருமையாக படமாக்கப்பட்டுள்ள ‘விவேகம்’ படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என உறுதியாகக் கூறுவேன்.

 

Leave a Reply