தமிழ் சினிமாவிற்கு புதிதாக ‘டார்ஜான்’ ஜுரம் பிடித்து விட்டது போலிருக்கிறது.
ஒரே சமயத்தில் இரண்டு ‘டார்ஜான்’ டைப் படங்கள் தயாராகி வருகின்றன.
ஆர்யா நடிக்கும் ‘கடம்பன்’, ஜெயம் ரவி நடிக்கும் ‘வனமகன்’ இரண்டு படங்களுமே காட்டில் வசிப்பவர்களைப் பற்றிய கதையாக உருவாகியுள்ளன என்பதை அந்தப் படங்களின் டிரைலர்களைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.
ஆர்யாவும், ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள்தான். இருவரும் சந்தித்த போதாவது தங்கள் படங்களின் கதைகளைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார்களா இல்லையா என்பது தெரியவில்லை.
ஆர்யா நடித்துள்ள ‘கடம்பன்’ படமாவது மலைவாழ் மக்களின் பிரச்சனைகளை முழுவதுமாகக் கையாண்டுள்ள படம் என்று தெரிகிறது. ஆனால், ‘வனமகன்’ படம் காதலை மட்டுமே கையாண்டுள்ளதாகத் தெரிகிறது.
‘வனமகன்’ டிரைலரைப் பார்த்ததுமே அது 1997ம் ஆண்டு வெளிவந்த ‘ஜார்ஜ் ஆஃப் த ஜங்கிள்’ படத்தின் தழுவல்தான் என்பது எளிதில் புரிந்து விடும்.
காட்டில் வசிக்கும் நாயகன், நகரத்துக்குள் நுழைந்து அந்த வாழ்க்கை முறையில் எப்படி சிக்கித் தவிக்கிறான் என்பதுதான் ‘ஜார்ஜ் ஆஃப் த ஜங்கிள்’ படத்தின் கதை. கூடவே, காதல், நட்பு இவையெல்லாம் அந்தப் படத்தில் இருக்கும்.
‘வனமகன்’ டிரைலரில் மேலே சொன்ன அனைத்து விஷயங்களுமே இடம் பெற்றுள்ளன.
ஏற்கெனவே, ‘தெய்வத் திருமகள்’ படத்தை ‘ஐயாம் சாம்’ படத்தைப் பார்த்து காப்பி அடித்தார் என ‘வனமகன்’ படத்தின் இயக்குனரான விஜய் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.
இப்போது ‘வனமகன்’ படத்திலும் அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிரைலரின் யு டியூப் பக்கத்திலேயே ரசிகர்கள் அப்படி ஒரு கமெண்ட்டை பதிவு செய்து வருகிறார்கள்.