35எம்எம்-ல் எடுக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவை 1973ம் ஆண்டிலேயே சினிமாஸ்கோப் என்ற அகன்ற திரைக்கு மாற்றியவர் இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.

சரித்திரப் படங்களின் மன்னன் என நாகராஜனை தாராளமாக அழைக்கலாம். அவர் இயக்கத்தில் வெளிவந்த “திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை, தில்லானா மோகனாம்பாள், திருமால் பெருமை, திருமலை தென்குமரி, அகத்தியர்” ஆகிய படங்கள் அவருக்கு தனிப்பட்ட பெயரை வாங்கித் தந்தன.

அப்போதைய ஆனந்த் தியேட்டர் உரிமையாளரான ஜி. உமாபதி படம் தயாரிக்க முடிவெடுத்து ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ‘ராஜராஜ சோழன்’ படத்தைத் தயாரித்தார்.

சிவாஜிகணேசன், முத்துராமன், சிவகுமார், நம்பியார், மனோகர், டி.ஆர்.மகாலிங்கம், சகஸ்ரநாமம், சீர்காழி கோவிந்தராஜன், சிவதாணு, சுருளிராஜன், லட்சுமி, விஜயகுமாரி, எஸ். வரலட்சுமி, குமாரி பத்மினி, மனோரமா, புஷ்பலதா, ஏ. சகுந்தலா, கலாவதி என அந்தக் காலத்தில் புகழ் பெற்ற நட்சத்திரங்கள் நடிக்க ஏ.பி.நாகராஜன் இயக்க, குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்க ‘ராஜராஜ சோழன்’ படம் சினிமாஸ்கோப்பில் உருவானது.

1973ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வெளிவந்த ‘ராஜராஜ சோழன்’ படம் ரசிகர்களை பிரமிக்க வைத்தாலும், செலவு செய்த தொகைக்கு மேல் வசூல் இல்லாமல் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால், தொடர்ந்து  தமிழில் சினிமாஸ்கோப் படங்கள் வரவில்லை. அதன் பின் 20 வருடங்களுக்குப் பிறகு 90களில்தான் சினிமாஸ்கோப் படங்கள் மீண்டும் வர ஆரம்பித்தன.

Leave a Reply