2017ம் ஆண்டின் கோடை விடுமுறை ஏறக்குறைய ஆரம்பமாகிவிட்டது. தமிழ்ப் புத்தாண்டு தினமான நாளை மறுநாள் ஏப்ரல் 14ம் தேதி முதல் பல புதிய படங்களின் வெளியீடுகள் ஆரம்பமாக உள்ளது.

அன்று ‘ப. பாண்டி, கடம்பன், சிவலிங்கா’ ஆகிய மூன்று படங்கள் வெளியாக உள்ளன. மூன்றே மூன்று படங்கள்தான் என்றாலும் இந்த படங்களுக்குள் கடும் போட்டி உள்ளது. ஒவ்வொரு படமும் ஒரு விதத்தில் சிறப்பாகவே தெரிகிறது.

ப. பாண்டி

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம். ராஜ் கிரண், பிரசன்னா, ரேவதி, சாயா சிங் ஆகியோருடன் சிறப்புத் தோற்றத்தில் தனுஷ், மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கிறார்கள். ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகராக தேசிய விருதையும் வென்ற தனுஷ் இயக்கும் படம் என்பதால் ‘ப. பாண்டி’ படத்திற்கு ரசிகர்களிடம் நிறையவே எதிர்பார்ப்பு.

“தனுஷ் நினைத்தால் ரஜினிகாந்தைக் கூட இயக்கியிருக்கலாம், ஆனால், என் மீது மரியாதை வைத்து என்னைத் தேடி வந்து நடிக்க சம்மதிக்க வைத்தார் தனுஷ். அவருக்கு இயக்குனருக்கான எல்லா தகுதியும் இருக்கிறது. இந்தப் படத்தில் ஒவ்வொருவரையும் அந்த அளவிற்கு நடிக்க வைத்திருக்கிறார்,” என தனுஷ் புகழ் பாடுகிறார் ராஜ்கிரண்.

கடம்பன்

ராஜ்கிரண் நடித்த ‘மஞ்சப் பை’ படத்தை இயக்கிய ராகவா இயக்கியுள்ள படம். யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஆர்யா, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தன் முதல் படத்தை குடும்பப் படமாகக் கொடுத்த ராகவா இந்த ‘கடம்பன்’ படத்தை ஒரு ஆக்ஷன் படமாகக் கொடுத்திருக்கிறார். வெறும் ஆக்ஷன் படமாக மட்டுமல்லாமல் மலை வாழ் மக்களின் வாழ்க்கைப் பிரச்சனையைப் பற்றிய படமாகவும் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

மலைப் பிரதேசத்தில் நடந்து செல்லவே கஷ்டமாக இருக்கும் இடங்களில் எல்லாம் சென்று இந்தப் படத்தைப் படமாக்கியிருக்கிறார்கள். கடந்த சில படங்களாக வெற்றிக்காகத் தவித்துக் கொண்டிருந்த ஆர்யாவுக்கு இந்த ‘கடம்பன்’ வெற்றிக் கதவைத் திறக்கும் என எதிர்பார்க்கலாம்.

சிவலிங்கா

கன்னடத்தில் வெளிவந்து 80 தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடி கன்னடத் திரையுலக வரலாற்றில் இதுவரை வெளிவந்த படங்களில் வசூலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள படம் என்ற சாதனை இந்தப் படத்திற்கு உண்டு. கன்னடத்திலிருந்து இந்தப் படத்தை தமிழுக்கும் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குனர் பி. வாசு. ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், ஊர்வசி, வடிவேலு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

பேய்ப் படமாக வந்த ‘சந்திரமுகி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பெரிய சாதனையைப் படைத்தவர் இயக்குனர் பி.வாசு.  பேய்ப் படமான ‘காஞ்சனா’ படத்தின் மூலம் பெரும் வசூல் சாதனை புரிந்தவர் ராகவா லாரன்ஸ். இப்படி பேய்ப் படங்களின் மூலம் தனித்த சாதனையைப் படைத்த இருவரும் இணைந்துள்ள ‘சிவலிங்கா’ படமும் பேய்ப் படம்தான் என்பதால் இந்தப் படமும் பெரிய வசூலைப் பெறும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளிவரும் இந்த மூன்று படங்களுமே வெற்றி பெற்றால் தமிழ்த் திரையுலகத்திற்கு பொற்காலம்தான்.

Leave a Reply