மகனை கதாநாயகனாக்கும் இயக்குநர் முத்தையா
22 Feb 2024
கிராமத்து பின்னணியில் திரைப்படம் எடுத்து புகழ் பெற்றவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கத்தில் வெளியான குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த வரிசையில் இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தின் மூலம் தனது மகனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளார். இயக்குநர் முத்தையாவின் படங்கள் கிராமத்து பின்னணியில் படமாக்கப்படும் நிலையில், இந்த படத்தின் கதை மதுரை மாவட்டத்தை சுற்றி நகர்வதை போன்று எழுதி இருக்கிறார்.
இளைஞர்களை மையப்படுத்திய எமோஷனல் டிராமாவாக இந்த படம் இருக்கும். விஜய் முத்தையா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை இந்த படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் முத்தையா திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த படத்தின் மிகமுக்கிய சண்டை காட்சி ஒருவாரம் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக பெரும் பொருட்செலவில் சினிமா திரையரங்கை செட்டாக உருவாக்கி உள்ளனர். இந்த படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகள் எம். சுகுமார் மேற்கொள்ள, வெங்கட்ராஜூ படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். கலை இயக்குனராக வீரமணி கணேசன் பணியாற்ற இருக்கிறார்.
Tags: Director Muthaiya, vijay muthaiya