ரவுடிசம், ஹைக்கூ - குறும்படங்கள் ஒரு பார்வை
Release Date | : | 04 Aug 2015 |
ரவுடிசம் - குறும்படம்
எம்.குமார், கே.உமா தயாரிக்க கே.பி.செல்வா இயக்கத்தில் நந்தா இசையமைப்பில் பாலாஜி, பார்த்திபன், மரிக்காணி, கே.பி.செல்வா, திலீப் ஆகியோர் நடித்துள்ள குறும் படம் ‘ரவுடிசம்’.
ஒரு வட்டச் செயலர் பதவிக்காக ஒரு பகுதியில் உள்ள இரண்டு ரவுடிகள் எப்படி மோதிக் கொள்கிறார்கள், ஒருவரை வீழ்த்தி மற்றொருவர் எப்படி அந்தப் பதவியைக் கைப்பற்ற முயல்கிறார் என்பதுதான் இந்தக் குறும்படத்தின் கதை.
கே.பி.செல்வா இந்தப் படத்தை மிகவும் யதார்த்தமாக இயக்கியிருக்கிறார். படத்தில் நடித்துள்ள யாருமே, நடிகர்கள் போலவே தெரியவில்லை. குறிப்பாக செல்வம் கதாபாத்திரத்தில் நடித்த பாலாஜி அப்படியே ஒரு வட்டத்தின் ரவுடியாகவே கண்ணுக்குத் தெரிகிறார்.
பத்து நிமிடத்திற்குள் ஒரு அரசியல் நிகழ்வை அனாயாசமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு முழுப் படத்தையும் இயக்கும் திறமை இயக்குனல் செல்வாவிடம் ஒளிந்திருக்கிறது.
ஹைக்கூ - குறும்படம்
பி.முத்துசாமி, எம்.ரெஜினா தயாரிப்பில் நவீன் முத்துசாமி இயக்கத்தில் நந்தா இசையமைப்பில் சுபாஷ், ராஜு பரத், மரிக்காணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
அண்ணன், தம்பி பாசத்தை நெகிழ வைக்கும் அளவிற்குக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் நவீன் முத்துசாமி. சிறு வயதிலிருந்தே கிணற்றில் நீச்சல் பழகி அந்த விளையாட்டில் மிகப் பெரும் சாதனைகளைச் செய்யத் துடிக்கிறான் தம்பி. ஒரு விபத்தில் அவனுக்கு இரு கைகளும் போய் விடுகின்றன. அண்ணன்தான் தம்பிக்கு கைகளாக இருக்கிறார். அவர்களை வளர்த்த மாமா தம்பியைக் கொன்று விடுமாறு அண்ணனிடம் சொல்கிறான். ஆனால், ஊனம் சாதனைக்குத் தடையல்ல என்பதை தம்பிக்கு புரிய வைக்கிறான் அண்ணன்.
மன தைரியம்தான் நம் வாழ்வில் முக்கியம் என்பதை இந்த இளைஞர்கள் ஆழமாகச் சொல்லியிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
அண்ணன் தம்பிகளாக நடித்த சுபாஷ், ராஜு பரத் இருவரும் சினிமாத்தனமில்லாம முகங்களால் கவர்கிறார்கள்.
சமீபத்தில் பார்த்த இந்த இரண்டு குறும் படங்களும் அந்த இயக்குனர்களுக்கு திரையுலகில் நிச்சயம் கதவைத் திறந்து விடும்.