இளம் இயக்குனரை ‘கௌத்த’ கௌதம் மேனன், தமிழ் சினிமா பரபரப்பு

Release Date:28 Mar 2018
வடிவேலு வசனத்தில் சொல்வதென்றால் ‘கௌத்துப்புட்டீங்களே...கௌதம் மேனன்’ என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு தினங்களுக்கு முன்பு இளம் இயக்குனரான கார்த்திக் நரேன் டிவிட்டரில் மறைமுகமாக ஒரு செய்தியைச் சொன்னாலும், அது பற்றிய பரபரப்பு இன்று காலை முதல்தான் அதிகமானது. 2016ம் ஆண்டின் கடைசியில் வெளிவந்த படம் ‘துருவங்கள் 16’. யாரிடமும் உதவி இயக்குனராகப் பணி புரியாமல் தானாகவே சினிமாவைக் கற்றுக் கொண்டு சொந்தப் பணத்தை முதலீடு செய்து ‘துருவங்கள் 16’ படத்தை எடுத்து முடித்தார் 21 வயதே ஆன கார்த்திக் நரேன். அந்த வருடத்தில் வெளிவந்த படங்களிலேயே வித்தியாசமான படம் என பலராலும் பாராட்டப்பட்டு பல விருதுகளையும் அள்ளினார் கார்த்திக் நரேன். அவருக்குள் சில இயக்குனர்களைப் பற்றிய பிம்பம் சராசரி ரசிகர்களைப் போலவே இருந்தது. அவர் வியந்து பார்த்த இயக்குனர்களான மணிரத்னம், கௌதம் மேனன் ஆகிய இருவரில், கௌதம் மேனன், கார்த்திக்கை அழைத்து அடுத்த படத்தைச் சேர்ந்து செய்வோம் என்றார். தான் வியந்து பார்த்த இயக்குனரே தன்னை அழைத்ததும் கொஞ்சம் ஆச்சரியத்துடன் அவருடன் இணைந்து ‘நரகாசூரன்’ படத்தை ஆரம்பித்தார். அதன்பிறகுதான் அவர் வியந்து பார்த்த இயக்குனர் வியாபார ரீதியில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்று புரிய வந்தது. ‘நரகாசூரன்’ படத்தின் முதலீடு செய்யாமல் தாமதம் செய்து கொண்டே வந்திருக்கிறார். எப்படியோ, முதல் படத்தில் கிடைத்த பெயரைக் காப்பாற்றியாக வேண்டும் என்று நினைத்த கார்த்திக் நரேன், அப்படத்தின் பைனான்சியரான பத்ரி மூலம் கடன் வாங்கி படத்தை முடித்துவிட்டார். இதற்கிடையில் ‘நரகாசூரன்’ படத்தின் வெளிநாட்டு உரிமை, மற்ற சில உரிமைகளை கௌதம் மேனன் நல்ல விலைக்கு விற்றிருக்கிறார். அது பற்றித் தெரிய வந்து கேட்ட போது அவரிடம் இருந்து சரியான பதில் இல்லையாம். நடிகர்களுக்காவது சம்பளம் கொடுங்கள் என்று கேட்டதற்கும் நழுவிவிட்டாராம். இப்போது படத்தை வெளியிட முடியாமல் சிக்கலில் சிக்கியிருக்கிறார் கார்த்திக் நரேன். நம்பியவர் கைவிட்ட நிலையில் இது பற்றி தாங்க முடியாத கார்த்திக் நரேன் டிவிட்டரில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு டிவீட் போட்டார். “சில சமயங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். சவாரி செய்வதற்கு முன்பாக ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். நீங்கள் செய்யாத ஒரு தவறிற்காக பல திசைகளிலிருந்தும், உங்கள் ஆர்வத்தை சிதைத்துவிடுவார்கள்,”.  https://twitter.com/karthicknaren_M/status/978297604260823041 அந்த டிவீட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக நேற்று கௌதம் மேனன் ஒரு டிவீட் போட்டதுதான் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியதாகிவிட்டது.  “சில இளம் படைப்பாளிகள் ஜோடியாக வளர்வதை விட்டுவிட்டு, அவர்கள் ஆர்வத்தை அவர்களே சிதைத்துக் கொள்கிறார்கள்”, என்று டிவீட்டியிருந்தார். https://twitter.com/menongautham/status/978673181182517248 இந்த டிவீட்டைப் பார்த்ததும் கடுப்பான கார்த்திக் நரேன், அதற்கும் பதில் டிவீட் போட்டார். “எல்லோரும் எதிர்த்த போதும், உங்களை நம்பி ஜோடி சேர்ந்து, இணைந்தேன். ஆனால், அதற்காக எங்களை குப்பையைவிடக் கேவலமாக நடத்தி, நாங்களே முதலீடு செய்ய வைத்தீர்கள். அதனால்தான் விட்டுச் செல்வது நல்லது என்று நினைத்தேன். தயவு செய்து இதை இன்னொரு இளம் படைப்பாளிக்கு செய்து விடாதீர்கள், வலிக்கிறது,”.  https://twitter.com/karthicknaren_M/status/978695761662640128 சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்திற்கு பலரும் கார்த்திக் நரேனுக்கு ஆதரவாக டிவீட் போட்டு வருகின்றனர். கௌதம் மேனன் சிறந்த இயக்குனர் என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அதோடு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் துணைத் தலைவர் ஆகவும் இருக்கிறார். கௌதமிடமிருந்து,   கார்த்திக் நரேனுக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருப்பதைப் பற்றி தமிழ்த் திரையுலகத்தில் வளர வேண்டும் என்று நினைக்கும் பல இளைஞர்கள், இதை ஒரு அனுபவப் பாடமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்களுடைய சமூக வலைத்தளப் பதிவுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

Share via: