அயோக்யா - விமர்சனம்

Release Date:13 May 2019
வெங்கட் மோகன் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில், விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் ‘அயோக்யா’. பெண்களுக்கு எதிரான வன்கொடுமையைப் பற்றியும், அதற்கான உடனடித் தீர்வையும் சொல்லும் படம். தெலுங்கில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘டெம்பர்’ படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். ஒரிஜனல் படத்தில் உள்ள கிளைமாக்சை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். அயோக்கியத்தனமாக செயல்படும் ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணுக்காக எப்படி மிக மிக யோக்கியத்தனமாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. விஷால் ஒரு அனாதை. போலீசார்தான் அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்கள் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என சிறு வயதிலேயே அவர் மனதில் ஆழமாகப் பதிகிறது. பொய் சான்றிதழ் கொடுத்து இன்ஸ்பெக்டர் ஆகவும் ஆகிறார். சென்னையில் பல கடத்தல் வேலைகளைச் செய்யும் பார்த்திபன் அவருடைய தொழிலுக்கு தொந்தரவு செய்யாத இன்ஸ்பெக்டர் வேண்டும் என்பதற்காக அவருடைய ஏரியாவில் விஷாலை வேலைக்கு மாற்றிக் கொண்டு வருகிறார். பார்த்திபனுக்காக செய்யும் வேலைகளுக்கு பதிலுக்கு தன் பல தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார் விஷால். ஆனால், ஒரு பெண் கொலை வழக்கில் பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் பிரச்சினை வருகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஆக்ஷன் ஹீரோ கதாபாத்திரம் என்றால் கேட்கவே வேண்டாம். விஷால் வெளுத்து வாங்குகிறார். அயோக்கியத்தனம் செய்யும் ஒருவன் இப்படித்தான் இருப்பான் என யாரையும் மதிக்காமல் சுற்றி வருகீறார். அப்படிப்பட்டவரை காதலும், ஒரு பெண்ணின் கொலையும் மாற்றுகிறது. கிளைமாக்சை தன் இமேஜுக்காகவே விஷால் மாற்றியிருப்பார் போலிருக்கிறது. நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ்தான் என்றாலும் நம்பவே முடியாத ஒரு கிளைமாக்ஸ். ‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு பார்த்திபனின் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. விஷாலை அசால்ட்டாக ஹேண்டில் செய்கிறார். இருவருக்குமிடையிலான வசன சண்டை ரசிக்க வைக்கிறது. ராஷி கண்ணா விஷாலின் காதலியாக அழகுப் பதுமையாக வந்து போகிறார். கே.எஸ்.ரவிக்குமாரின் கதாபாத்திரமும் அதில் அவருடைய நடிப்பும் போலீஸ் மீதான மரியாதையை இன்னும் அதிகமாக்குகிறது. சாமி சிஎஸ் பின்னணி இசையில் அசத்துகிறார். ஒளிப்பதிவும், சண்டைக் காட்சிகளும் படத்திற்கு பக்கபலம். பக்காவான கமர்ஷியல் படத்தை சில லாஜிக் மீறல்களுடன் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் மோகன். அயோக்யா - ஆக்ஷன் படம்யா...

Share via: