தாயம் - விமர்சனம்

Release Date:24 Mar 2017
தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் புதுப் புது திரைப்படங்கள் வெளிவருகின்றன. பல புதிய இயக்குனர்கள் அறிமுகமாகிறார்கள். ஒவ்வொரும் ஒவ்வொரு விதமான படைப்பைப் படைக்கிறார்கள். பல வித்தியாசமான கதைகள், புதிதான திரைக்கதைகள் என வியக்க வைக்கிறார்கள். கதைகள் நன்றாக இருந்தால் திரைக்கதையில் தடுமாற்றம் இருக்கும், கதை சுமாராக இருந்தால் கூட திரைக்கதை சுவாரசியமாக அமைந்து படத்தை ரசிக்க வைக்கும். இந்த வாரம் வெளிவந்த பல புதிய படங்களில் ‘தாயம்’ படம் ஒரு வித்தியாசமான கதைதான். ஆனால், அதை திரைக்கதையாக கொடுத்திருக்கும் விதம்தான் சுவாரசியமில்லாமல் இருக்கிறது. படத்தின் மொத்த கதையும் ஒரே இடத்தில்தான் நடப்பதுதான் அதற்கக் காரணம். ஒரு கம்பெனிக்கு புதிதாக சிஇஓ ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு பெரிய அறைக்குள் இன்டர்வியூ நடக்கிறது. அந்த நேர்முகத் தேர்வில் ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் என மொத்தம் 8 பேர் கலந்து கொள்கிறார்கள். அப்படி கலந்து கொண்ட 8 பேர்களுக்குள் சண்டை நடக்க ஆரம்பிக்க ஒவ்வொருவராக மர்மமான முறையில் இறக்கிறார்கள். அப்படி நடக்க என்ன காரணம் என்பதுதான் படத்தின் கதை. ஒரே அறைக்குள்ளேயே முழு படத்தையும் நகர்த்துவதற்கு இயக்குனருக்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். ஆனால், அந்தத் துணிச்சல்தான் படத்திற்கும் இடையூறாக அமைந்துவிட்டது. இருந்தாலும் கடைசியில் நாம் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை வைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. இப்படிப்பட்ட புதிய முயற்சிகளை கொஞ்சம் தெரிந்த முகங்களை வைத்து படமாக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள் என்பதால் ஏதோ ஒரு அன்னியத்தனம் படம் முழுவதும் தெரிகிறது. குறும் படமாக கொடுக்க வேண்டிய படத்தை முழு நீளத் திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார்கள். Cast & Crew நடிகர், நடிகைகள் - சந்தோஷ் பிரதாப், ஜெயகுமார், ஜீவா ரவி, ஷ்யாம் கிருஷ்ணன், காதல் கண்ணன், ஐரா அகர்வால், அஜய், அன்மோல் சந்து, ஆஞ்சல் சிங், சந்தீப், சுபாஷ் செல்வம், ஜெயதேவ், அருள், சஹானா இயக்கம் - கண்ணன் ரங்கசாமி இசை - சதீஷ் செல்வம் ஒளிப்பதிவு - பாக்கியராஜ் படத் தொகுப்பு - சுதர்சன் பாடல்கள் - முத்தமிழ், அருண்ராஜா கலை - வினோத் ராஜ்குமார் தயாரிப்பாளர் - ஏ.ஆர்.எஸ். சுந்தர் இணை தயாரிப்பாளர் - பி. திரு தயாரிப்பு - பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல் வெளியான தேதி - 24 மார்ச் 2017  

Share via: