தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா,  மற்றும் பலர் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் தலைப்பும், முதல் பார்வையும் இன்று மாலை வெளியிடப்பட்டது.

விஜய் படங்கள் என்றாலே கமர்ஷியல் அதிரடியாக இருக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அதற்கேற்றபடி படத்தின் தலைப்பும், முதல் பார்வையும் அமைந்துள்ளது.

இந்த ‘மெர்சல்’ முதல் பார்வை வெளிவந்த சிறிது நேரத்திலேயே அது சல்மான் கான் நடித்து கடந்த வருடம் வெளிவந்த ‘சுல்தான்’ படத்தின் முதல் பார்வை போலவே உள்ளது என சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது.

‘சுல்தான்’ படத்தின் நாயகன் சல்மான் கான் கைகளில் மண்ணைத் தட்டுவது போன்று அமைக்கப்பட்ட அதே ஸ்டைலுடன்தான் ‘மெர்சல்’ முதல் பார்வையும் உள்ளது.

மல்யுத்தம், கபடி போன்ற விளையாட்டுகளில் இப்படி கைக்கு பிடிமானம் கிடைப்பதற்காக மண்ணை எடுத்து தட்டுவார்கள். அதைத்தான் இரண்டு படங்களின் முதல் பார்வையிலும் வைத்துள்ளார்கள்.

‘மெர்சல்’ படத்தின் அடுத்த போஸ்டரை இன்னும் சில மணி நேரங்களில் அதாவது நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட உள்ளார்கள்.

அதைப் பார்ப்பதற்கும் விஜய் ரசிகர்கள் வழக்கம் போல ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply