35எம்எம் படச்சுருள்களில் திரைப்படங்கள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் 65எம்எம் படச்சுருள்களில் படமாக்கப்பட்டு அவற்றை 70எம்எம் படச்சுருள்களில் பதிவு செய்து திரையிடப்பட்ட படங்கள் 70எம்எம் படங்கள் என அழைக்கப்படுகின்றன. 5 எம்எம் அளவு அதிகமாக பதிவு செய்யப்படுவதில் அந்த அளவு ஒலிப்பதிவிற்கான இடமாக அமைக்கப்பட்டுள்ளது.

1896ம் ஆண்டு வாக்கிலேயே இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 1950க்கும் மேல்தான் 70எம்எம் தொழில்நுட்பம் கொண்ட படங்கள் வர ஆரம்பித்தன. ஆனால் இப்படி எடுக்கப்படும் படங்களுக்கான செலவுகள் அதிகமாக இருந்த காரணத்தால் உலக அளவிலும் இந்த தொழில்நுட்பம் மிகப் பெரிய வெற்றியை அடைய முடியவில்லை. எனவே 1990க்குப் பிறகு இத் தொழில்நுட்பத்தில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போனது.

1986ல் வெளிவந்த மாவீரன் திரைப்படம்தான் தமிழில் வெளிவந்த முதல் 70 எம்எம் படமாக அமைந்தது. இப் படத்தை திரையிடுவதற்கு திரையரங்குகளில் நல்ல அகலமான திரை அமைக்க வேண்டும். பல திரையரங்குளில் ஏற்கெனவே உள்ள திரையை தற்காலிகமாக மேலும் அகலப்படுத்தி இத் திரைப்படம் திரையிடப்பட்டது.

ராஜசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் பலர் நடித்த படம் ‘மாவீரன்’. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெளிவந்த ‘மர்த்’ திரைப்படத்தின் ரீமேக்தான் ‘மாவீரன்’.

‘மாவீரன்’ படத்திற்குப்  பின்னர்  தமிழில் அதிகமான 70எம்எம் படங்கள் தமிழில் வரவில்லை. ஒரு வேளை ‘மாவீரன்’ வியாபார ரீதியாக தோல்வியடைந்ததும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

Leave a Reply