2017ம் ஆண்டில் இதுவரை வெளியாகியுள்ள 83 படங்களில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற படங்கள் என்று எந்தப் படத்தையும் சொல்ல முடியாது.

‘பாகுபலி 2’ படம் கூட ஒரு டப்பிங் படம்தான். அதனால், அதை தமிழ்ப் படங்களின் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.

இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த படங்களில் குறிப்பிட வேண்டிய படங்கள், “பைரவா, சி 3, காற்று வெளியிடை”. 83 படங்களில் 3 படங்கள் கூட பெரிய வெற்றி என்று சொல்ல முடியாத நிலைதான் உள்ளது. இந்த ஜுன் மாதத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சில படங்கள் வெளிவர உள்ளன.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ஜெயம் ரவி நடித்துள்ள ‘வனமகன்’, சிம்பு நடித்துள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய மூன்று படங்களும் ஜுன் 23ம் தேதி வெளிவர உள்ளன.

ஜுன் 26ம் தேதி ரம்ஜான் என்பதால் 23ம் தேதி படத்தை வெளியிட்டால் அடுத்த நான்கு நாட்களில் படத்தின் வசூலை அள்ளலாம் என்ற கணக்கில் இந்தப் படங்களை வெளியிடுகிறார்கள்.

யாருக்கு வெற்றி கிடைக்கப் போகிறதோ….?.

Leave a Reply