வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 15ம் தேதி வெளிவந்த படம் ‘கோமாளி’.

படத்தின் டிரைலரில் ரஜினிகாந்தை கிண்டலடித்ததால் படத்திற்கு நல்ல விளம்பரம் எளிதில் கிடைத்தது. அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளும் படத்திற்கு மேலும் விளம்பரத்தைக் கொடுத்தது.

ஒரு டிரைலரால் படத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கும் என்பதற்கு இந்தப் படம் சமீபத்திய உதாரணம். டிரைலரில் இருந்த நகைச்சுவை படத்திலும் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களை படம் ஏமாற்றவில்லை.

ஏறக்குறைய இரண்டாவது நாயகன் போல படத்தில் இடம் பெற்ற யோகி பாபு ரசிகர்களை நன்றாகவே சிரிக்க வைத்தார்.

போட்டிக்கு வேறு எந்த படமும் இல்லாத காரணத்தால் இந்தப் படம் ஜெயம் ரவியின் முந்தைய படங்களின் வசூல் சாதனையையும் முறியடித்தது.

வியாபார ரீதியாக படம் லாபத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் எழுந்த கதைத் திருட்டு சர்ச்சையை டைட்டில் கார்டில் நக்கலடித்த இயக்குனர் அடுத்த படத்தில் ஒரிஜனல் கதையைத் தேர்வு செய்வார் என நம்புவோம்.