ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தில் ‘சாட்டிலைட்’ டிவி உரிமை என்பது மிகப் பெரும் வியாபாரம்.

தமிழைப் பொறுத்தவரை சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளே அதிக விலை கொடுத்து படங்களை வாங்கி வருகின்றன. கடந்த சில வருடங்களாக ஜெயா டிவியும் பெரிய படங்களை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது.

ஒரு பெரிய திரைப்படம் தியேட்டர்களில் 50 நாட்களைக் கடப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. படம் வெளியான சில நாட்களில் திருட்டு விசிடிக்கள் வந்து விடுகிறது.

இருந்தாலும் டிவி உரிமை பல கோடி ரூபாய் வரை விற்கப்படும். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக எந்த தமிழ்த் தொலைக்காட்சியும் பெரிய படங்களைக் கூட அதிக விலை கொடுத்து வாங்குவதை நிறுத்திவிட்டன.

‘தெறி, கபாலி’ ஆகிய படங்களின் டிவி உரிமை இன்னும் விற்கப்படவில்லை என்றே சொல்கிறார்கள்.

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ‘2.0’ படத்தின் டிவி உரிமையை ஜீ டிவி தொலைக்காட்சி 110 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டதாக இன்று பரபரப்பாகப் பேசப்பட்டது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ‘2.0’ படத்தை ஒளிபரப்பும் உரிமையை 15 வருடங்களுக்கு ஜீ டிவி வாங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

‘2.0’ படத்தைத் தயாரித்து வரும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின்  ராஜு மகாலிங்கம் “ஜீ டிவி எங்களது மெகா படைப்பான ‘2.0’ படத்தின் சாட்டிலைட் பங்குதாரர் என்பது உண்மைதான்” என டிவிட்டரிலும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், விலை என்ன என்பதைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.

ஜீ டிவி 110 கோடி கொடுத்து படத்தை வாங்கியது உண்மைதான் என்றால், ‘2.0’ படம்தான் இந்தியாவிலேயே அதிக விலை கொடுத்து சாட்டிலைட் உரிமை வாங்கப்பட்ட படம் என்ற பெருமையைப் பெறும்.

அமீர் கான் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘தங்கல்’ படத்தை ஜீ டிவி 75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தது. அந்த சாதனையை ஜீ டிவியே 110 கோடி ரூபாய் கொடுத்து ‘2.0’ படத்திற்கு மாற்றிவிட்டது.

‘தங்கல்’ படத்திற்கு முன்பு சோனி டிவி, ‘தூம் 3’ படத்தை 65 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது சாதனையாக இருந்தது.

‘2.0’ படத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாரை நடிக்க வைத்ததன் காரணம் என்ன என்பது ரசிகர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுவதாகச் சொல்லப்படும் ‘2.0’ படத்தின் நான்கில் ஒரு பங்குத் தொகையான 100 கோடி ரூபாய் சாட்டிலைட் உரிமையிலேயே வசூலாகிவிட்டது.

படம் வெளியாவதற்கு முன்பே 100 கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டது ‘2.0’.

நன்றி – www.screen4screen.com

Leave a Reply